ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

Land Commisioner General's Department

Ministry of Agriculture, Livestock, Land and Irrigation

පැති මෙනුව

வரலாறு

...

இலங்கை நீண்ட காலமாக பிரித்தானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆளப்பட்டு வந்தது. அக்காலப்பகுதியில், ஈர வலயக் காணிகளில் தேயிலைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, உலர் வலயத்தின் நீர்ப்பாசனக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தமை, மக்கள் தொகை தென்மேற்கு ஈரவலயத்தை நோக்கியே செறிவடைந்தமை, நெற் செய்கைக்கான முறையான கவனம் செலுத்தப்படாமை மற்றும் சுயமாக நிறைவடைந்த பொருளாதார முறைமைக்கு பதிலாக வர்த்தக பொருளாதார முறைமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை, முதலாவது உலகப் போருடன் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இத்தகைய காரணங்களினாலும், அரச மந்திரி சபையின் (State Council) இந்நாட்டுப் பிரதிநிதிகள் இது குறித்து விசேட கவனம் செலுத்தியமையினாலும், உணவு உற்பத்திக்கான அவசரத் திட்டமொன்றின் தேவைப்பாடு எழுந்தமையினாலும், தென்மேற்குப் பிராந்தியத்தில் செறிவடைந்திருந்த மக்கள் தொகையை தீவின் ஏனைய பகுதிகளில் குடியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டமையினாலும், இதற்கான தீர்வாக பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1927 ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முறையாக காணி ஆணைக்குழுவொன்று (Land Commission) நியமிக்கப்பட்டது. அவ்ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, 1931 ஆம் ஆண்டில் காணி ஆணையாளர் திணைக்களம் நிறுவப்பட்டு, இலங்கையின் முதலாவது காணி ஆணையாளராக திரு. சி.வி.பிரெய்ன் (C.V. Brayne) அவர்கள் நியமிக்கப்பட்டார். அதற்கமைய, அரச காணிகள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் இத்திணைக்களத்திற்கு மாற்றப்பட்டன. பெரிய அளவிலான குடியேற்றத் திட்டங்கள் (மகா விவசாயக் குடியேற்றங்கள்), மேட்டுநிலத் திட்டம், கிராம விரிவாக்கத் திட்டம், இளைஞர் திட்டம், மத்திய தர வர்க்கத்தினருக்கான திட்டம், ஆகிய ஐந்து விசேட அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் காணுதல், (காணிக் கச்சேரிகளை நடாத்தி) காணி பயனாளிகளைத் தெரிவு செய்தல் மற்றும் காணிகளைப் பகிர்ந்தளித்தல் என்பன இங்கு காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட பிரதான பணிகளாகும்.

அரச காணிகளையும் தனியார் காணிகளையும் பிரித்தறிந்து கொள்வதற்காக 1931 ஆம் ஆண்டில் காணி இணக்கப்பாட்டுச் சட்டமூலம் (காணி சீராக்கல் கட்டளைச் சட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் சட்டமாக்கப்பட்டதுடன், அச்சட்டத்தின் பிரகாரம் அரச காணிகள் அனைத்தினதும் பாதுகாப்பளிப்பு, பகிர்ந்தளிப்பு மற்றும் அபிவிருத்தி செய்தல் ஆகிய அனைத்து அதிகாரங்களும் இத்திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.

பல்வேறு திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காகவும் குடியிருப்புக்காகவும் காணிகளை வழங்குதல், பல்வேறு வகையான ஒதுக்கீடுகளை (காப்புக்காடுகள்) அடையாளம் காணுதல், கடற்கரை நிர்வாகம், பொதுக் குளங்கள் மற்றும் ஓடைகளின் மேலாண்மை ஆகியவற்றின் நிர்வாக வசதிக்காக 1947 ஆம் ஆண்டில் அரசாங்கக் காணிகள் கட்டளைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு அந்த அதிகாரங்கள் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க காணிச் சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டத்தின் பிரகாரம், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன் போது 50 ஏக்கருக்கும் அதிகமான அனைத்து காணிகளின் உரிமைகளும் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டன. 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காணி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட காணிகளை மீண்டும் அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்றுப் பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பும் காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது.

அரச காணிகளை சட்டவிரோதமாக அநுபவித்து வரும் அல்லது குடியிருந்து வரும் நபர்களை அக்காணிகளிலிருந்து அகற்றி, அதன் கைவசத்தை மீண்டும் அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்வதற்காக 1979 ஆம் ஆண்டில் அரசாங்கக் காணிகளின் கைவசத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்பணியும் காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தின் 11 ஆம் பின்இணைப்பிற்கு (நிரலுக்கு) உட்பட்டு, காணி தொடர்பான விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டது. அதேபோன்று, சர்வதேச மாகாண (மாகாணங்களுக்கிடையிலான) அபிவிருத்தித் திட்டங்களுடன் தொடர்புடைய காணிகளின் நிர்வாகம் காணி ஆணையாளர் திணைக்களத்தின் பணியின் கீழ் கொண்டுவரப்பட்டது. மாகாணங்களுக்கிடையிலான நிர்வாகத்தின் கீழ் வரும் அனுராதபுரம், புத்தளம், குருநாகல், மன்னார், வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள்; அனுராதபுரம், பொலன்னறுவை, மஹியங்கனை, தெபரவெவ, அம்பாறை என ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிர்வாகப் பணிகளை இலகுபடுத்துவதற்காக பிரதி காணி ஆணையாளர், உதவிக்காணி ஆணையாளர், குடியேற்ற அதிகாரி, கள ஆலோசகர் போன்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

2004.09.03 ஆம் திகதியமைச்சரவைத் தீர்மானத்திற்கு இணங்க, அதுவரை செயற்பட்டு வந்த காணி ஆணையாளர் திணைக்களம், 2004.09.15 ஆம் திகதி முதல் “காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்” எனத் தரமுயர்த்தப்பட்டது. அதற்கமைய, அதுவரை காணி ஆணையாளருக்கு இருந்த அதிகாரங்கள் “காணி ஆணையாளர் நாயகத்திற்கு” மாற்றப்பட்டன.

பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.